மேகதாது.. அன்றும் இன்றும்!

காவிரியில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதையும் தமிழகம் அதை எதிர்ப்பதையும் அறிந்திருப்பீர்கள்.

இங்கு அணை கட்டப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தமிழக விவசாயிகள் அச்சம் தெரிவித்துவருகிறார்கள்.

மேகதாதுவில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டுவது தான் கர்நாடக அரசின் நீண்ட காலத் திட்டம். காவிரி ஆற்றின் குறுக்கே எத்தகைய அணையை கட்டுவதாக இருந்தாலும் கடைமடைப் பாசன மாநிலமான தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன.

மேகதாது பகுதியின் 120 மீட்டர் ஆழமுள்ள பகுதியை நிறைத்து ஓடிவரும் காவிரி

ஆனாலும் மேகதாது அணையைக் கட்ட கர்நாடகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. “தமிழகத்தின் அனுமதி பெற்று அணையை கட்டுவோம்” என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின்கட்கரியை குமாரசாமி  சந்தித்து மேகதாது அணை திட்டம் குறித்து பேசினார். கட்காரியும் தமிழக அரசிடம் ஒப்புதல் பெற்று வந்தால், புதிய அணை கட்ட உடனடியாக அனுமதி அளிப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அளவுக்கு அதிகமான அளவில் மழை பெய்து, ஏராளமான டி.எம்.சி. நீர் கடலில் கலப்பதாகவும், மேகதாதுவில் அணை கட்டி அதை தேக்கி வைத்தால் தமிழகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று குமாரசாமி கூறினார்.

ஆனால் இது ஏமாற்று முயற்சி என்கிறார்கள் நீர்மேலாண்மை ஆர்வலர்கள்.

2013ம் ஆண்டில் இதே பகுதி தண்ணீர் இன்றி

அதாவது, “கர்நாடகத்தில் பெய்த தொடர்மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து ஜூலை மாதத்தில் மட்டும் 80 டிஎம்சிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதில் சுமார் 70 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. 67 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால், தமிழகத்துக்கு 10 டிஎம்சி தண்ணீர் கூட கிடைத்திருக்காது. இப்போது மேட்டூர் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் மேகதாது அணையில் சேமித்து வைக்கப்படும்.  இனிவரும் காலங்களில் மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டாலும் காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காது” என்கிறார்கள் நீர்மேலாண்மை ஆர்வலர்கள்.

மேலும், “கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே தற்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி.  இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு நீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக கூடும்.

அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். காவிரி நீரில் கர்நாடகத்துக்குரிய பங்கு 270 டிஎம்சி தான் எனும் போது ஒரே நேரத்தில் 200 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி அவைக்கும் அளவுக்கு அம்மாநிலத்தில் அணைகள் கட்டப்படுவது கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார்கள்.

காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டுமானால் அதற்கு சரியான தீர்வு மேட்டூர் அணைக்கு கீழே அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளை கட்டுவது தான் என்றும் நீர்மேலாண்மை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

படங்கள்: 1.மேகதாது பகுதியின் 120 மீட்டர் ஆழமுள்ள பகுதியை நிறைத்து ஓடிவரும் காவிரி.

2. 2013ம் ஆண்டில் இதே பகுதி தண்ணீர் இன்றி

(படங்கள் உதவி: முகநூல் பதிவர் நம்பிக்கைராஜ்)

கார்ட்டூன் கேலரி