மேகதாது அணை விவகாரத்தினால் அமளி: 5வது நாளாக முடங்கிய பாராளுமன்றம்

டில்லி:

மேகதாது அணை விவகாரம், ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவாதிக்க  வலியுறத்தி காங்கிரஸ் மற்றும் அதிமுக, திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 5வது நாளாக முடங்கியது.

இன்று காலை லோக்சபா கூட்டம் தொடங்கியதும், மேகதாது அணை குறித்து விவாதிக்க கோரி, அதிமுக, திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த கூச்சல் குழப்பத்திற்கு இடையே முத்தலாக் தடை குறித்த திருத்தப்பட் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில்,  கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி அவையின் மையப் பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பினர்.

தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரியும், காங்கிரஸ் கட்சி ரஃபேல் விவகாரத்தை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஃபேல் விவகாரததில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்களும் முழக்கங்களை எழுப்பியதால் கூச்சல்-குழப்பம் நிலவியது.

இதனால் முதலில் நண்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்ட மக்ளவை பின்னர் 2 மணி வரையும், தொடர்ந்து அமளி நீடித்து வந்ததால், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

அதுபோல,  மாநிலங்களவையிலும் மேகதாது மற்றும் ரஃபேல் விவகாரங்களால் அமளி ஏற்பட்டது. அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பினர்.  இதனால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பாராளுமன்ற வளா கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.