மேகதாது, ரஃபேல் விவகாரம்: பாராளுமன்றம் இன்றும் முடக்கம்
டில்லி:
ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு, மேகதாது அணை விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து போன்ற காரணங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், பாராளுமன்ற இரு அவைகளும் இன்று 6வது நாளாக முடக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கம்போல இன்று காலை மக்களவை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது கவன ஈர்ப்பு தீர்மானம்மீது விவாதிக்க சபாநாயகரிம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், சபாநாயகர் மறுப்பு தெரிவித்தை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக, திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக முற்பகல் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள், பிற்பகல் கூடியதும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.