மேகதாது அணை அனுமதி விவகாரம்: புதுச்சேரியிலும் சிறப்பு சட்டபேரவை கூட்ட முடிவு

புதுச்சேரி:

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்துள்ள விவகாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில்,  அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில்,  புதுச்சேரியிலும் சிறப்பு சட்டபேரவை கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முடிவு செய்து அதற்கான திட்ட அறிக்கையை மத்தியஅரசிடம் தாக்கல் செய்தது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி புதுச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து,  இது சம்பந்தமாக சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டசபை செயலர் வின்சென்ட் ராயருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் விரைவில் கூட்டப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed