மேகதாது அணை அனுமதி விவகாரம்: 14ந்தேதி புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம்

புதுச்சேரி:

மேகதாது அணை  கட்ட மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம் குறித்து விவாதிக்க வரும்  14ந்தேதி புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுவதாக புதுச்சேரி மாநில  பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவிப்பு வெளியிடடு உள்ளது.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்துள்ள விவகாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் ஓரவஞ்சனையை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இதையடுத்து,  தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில்,  புதுச்சேரியிலும் சிறப்பு சட்டபேரவை கூட்டத்தை கூட்ட திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதை யடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டசபை செயலர் வின்சென்ட் ராயருடன்  நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் வரும் 14ந்தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.