மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!

--

சென்னை:

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி  உள்ள நிலையில், திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி உள்ளது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்கும் பொருட்டு, காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வந்தது. அதன்படி, மேகதாது என்ற மலைப்பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கைக்கு மத்திய  மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் முடிவுக்கு  தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

அதன்படி இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

சரியாக 11 மணி அளவில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது விவகாரம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேகதாது அணைக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை எதிர்த்து, தமிழக அரசு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ள நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் நாளை மனுவும்  தாக்கல் செய்கிறது.