மேகதாது அணை விவகாரம்: அதிமுக, திமுக எம்.பி.க்களின் அமளியால் பாராளுன்றம் ஒத்திவைப்பு
டில்லி:
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும், அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் ஏற்படுத்திய கடும் அமளியால் பாராளுமன்றம் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. முதல்நாளான நேற்று, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மறைந்த எம்பிக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக, காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது குறித்து, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரியும், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும், மக்களவை மற்றும் மாநிலங்ளவை ஆகிய இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர் கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து திமுக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும், ரபேல் போர் விமானம் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே, ரபேல் விவகாரத்தில், நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணை கோரி காங்கிரஸ் கட்சியும், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி சிவசேனா கட்சியும் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக, மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதே பிரச்சனைகளால், மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.