மேகதாது அணை விவகாரம்: திருச்சியில் டிச.4ம் தேதி ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் தகவல்

சென்னை:

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இதுகுறித்து திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் , மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து டிசம்பர் 4ந்தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு வரும் காவிரி தண்ணீரை தடுக்கும் வகையில் காவிரியின் குறுக்கேமேகதாது என்ற இடத்தில் கார்நாடக புதிய அணை கட்ட முடிவு செய்து, அதற்கான திட்ட  அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இது தமிழக அரசியல் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று கலை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. உள்பட 9 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் எழுந்து நின்று அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்ததும் அனைத்துக்கட்சி தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  டிச.4ம் தேதி திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்  என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தோழமைக் கட்சிகளுடன் விவாதிக்கப்பட்டது, போதிய நேரமில்லாததால் மற்ற கட்சிகளை அழைக்க முடியவில்லை என்று கூறிய ஸ்டாலின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றார்.

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்ட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின்  மேகதாது ஆணை பற்றி விரிவாக தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவும் அனைத்துக்கட்சிகள் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி