சில்லாங்:

இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனை செய்வது, வாங்குவது தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தால் மாநில மக்களின் உணவு பழக்கத்திற்கும், மாநில பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல்வர் முகுல் சங்மா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்தனர். இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து முகுல் சங்மா பேசுகையில், ‘‘மாட்டு இறைச்சி என்பது மலைவாழ் மக்களின் உணவு பழக்கத்தோடு இணைந்த ஒன்றாகும். 2015&16ம் ஆண்டில் இதன் தேவை 23 ஆயிரத்து 634 மெட்ரிக் டன்னாக இருந்தது.

மாநிலத்தில் மாட்டு இறைச்சியின் உற்பத்தி 12 ஆயிரத்து 834 மெட்ரிக் டன் தான். 10 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் இறைச்சி வெளியில் இருந்து வாங்கப்பட்டது. அதிகரித்து வரும் தேவையை சரிக்கட்ட 2017-22ம் ஆண்டிற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மத்திய அரசின் தடை உத்தரவு கால்நடைகளை சார்ந்துள்ள 5.7 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும்’’ என்றார்.

முதல்வர் தொடர்ந்து பேசுகையில், ‘‘ மக்களின் உணவு உரிமையை பாதிக்கும் செயலாகும். சொந்த விருப்பத்தின் பேரில் உணவு உட்கொள்ள மக்களை அனுமதிக்க வேண்டும். மத விழாக்கள், கலாச்சாரம் மற்றும் சமூக நிகழ்வுகளில் காலம் காலமாக பின்பற்றப்படும் நடைமுறைகளை இந்த உத்தரவ பாதிக்கச் செய்யும்.

2015ம் ஆண்டில் சர்வேப்படி மாநிலத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து 38.7 சதவீதமாக உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மேகாலயாவில் 42.9 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளின் மதிய உணவில் கலப்பு உணவு முறை பின்பற்றப்படுகிறது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘கால்நடை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவால் மாநிலத்தில் 25 கி.மீ. தொலைவிலும், 50 கி.மீ தொலைவில் உள்ள பங்களாதேஷ் சர்வதேச எல்லையிலும் உள்ள கால்நடை சந்தையின் வர்த்தகம் பாதிக்கும்.

மேகாலயாவில் 443 கி.மீ. தூர சர்வதேச எல்லை உள்ளது. அஸ்ஸாமுடன் 800 கி.மீ. தூர எல்லைப் பகுதி உள்ளது. அதனால் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்’’ என்றார்.