டில்லி

தேசிய குடியுரிமைப் பட்டியல் மற்றும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் வருத்தம் அடைந்துள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரக் குழுக்கூட்டம் டில்லியில் நடைபெற்று வருகிறது.    இந்த கூட்டத்தில் மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா கலந்துக் கொண்டுள்ளார்.  அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினார்கள் .   சங்மா அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

சங்மா, ”தேசிய குடியுரிமைப் பட்டியல் மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவை எனக்கு வருத்தத்தை அளிக்கின்றன.   மத்திய அரசு தேசிய அளவில் நன்மை அளிக்கும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  ஆனால் தேசிய அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மாநில அளவில் பாதிப்பை அளிக்கிறது.

ஆகையால் மத்திய அரசு அனைத்து தரப்பினருக்கும் துயர் ஏற்படாத வகையில்  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.   வடகிழக்கு இந்திய மக்கள் இந்த தேசிய குடியுரிமைப் பட்டியலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எனக்கு தோன்றுகிறது.    இது போன்ற எளிதான பல நடவடிக்கைகள் மாநில அளவில் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கக்கூடும்.

எனவே மத்திய அரசு மாநில மக்களுக்குத் தேவையான காலக்கெடுவை அளிக்க வேண்டும்.   அந்த காலக் கெடுவுக்குள் பிரச்சினைகளை சுமுகமாக முடிக்க தகுந்த நிலையை ஏற்படுத்தி அதன் பிறகு இது  போன்ற சட்டங்களை அமல்படுத்த வேண்டும்” எனக் கூறி உள்ளார்.