மேகாலயா சுரங்க விபத்து:  ஒருவேளை உணவுக்காக உயிரை பணயம் வைக்கும் தொழிலாளிகள்

சுரங்கத்தின் உள்ளே தண்ணீர் புகும் என தெரிந்தே அனைவரும் சென்றோம் என மேகாலயா சுரங்க விபத்தில் இருந்து தப்பித்த சாயிப் அலி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேகாலயாவின் கிழக்கு பகுதியில் உள்ள  ஜைன்டியா மாவட்டம். மலைபிரதேசமான பகுதி.  இங்கு ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அனுமதி பெறாத சுரங்கங்களும் இயங்குகின்றன. இவற்ரில்  ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பகுதியில் உள்ள சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் அருகில் உள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் புகுந்தது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் நுழைந்ததும் ஐந்து தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர். ஆனால் . மேலும் 13 பேர் வெளியேற முடியாமல் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கின்றனர் என்று  கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்துறையினரும்  தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சுமார் நூறு பேர் விரைந்து சென்று மீட்பு பணிகளை தூவங்கினர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.

முதற்கட்டமாக சுரங்கத்தை சூழ்ந்திருக்கும் நீரை வெளியேற்றும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். கைவிடப்பட்ட அந்த நிலக்கரி சுரங்கம், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சட்ட விரோதமாக செயல்பட துவங்கியிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதை நடத்தி வந்த லும்தாரி கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சுக்லைன் தலைமறைவாகி விட்டார். இவரது கூட்டாளியான ஜிரின் சுல்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவ சமானது என்று மாநில முதலமைச்சர் கான்ராட் கே. சங்க்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்,  தொழிலாளிகளின் 3 ஹெல்மெட்களை கண்டு எடுத்துள்ளனர்.

“சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறோம். தேசிய பேரிடர் மீட்பு குழு பல நவீன உபகரணங்களை கொண்டு வந்திருக்கிறது. . அதன்மூலம் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறோம்.. ஆற்றின் தண்ணீர் சுரங்கத்துக்குள் செல்வ தால் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே  உள்ளது. இது மிகப்பெரும் சவாலாக இருக்கிறது” ; என்று  கிழக்கு ஜைன்டியா ஹில்ஸ் எஸ்.பி சில்வெஸ்டர் நாங்டின்ஞ்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  தப்பிய தொழிலாளிகளில் ஒருவரான சாயிப் அலி தனியார் தொலைக்காட்சி ஒன்றில், “ நிலக்கரி சுரங்கத்தில் இறங்கும்போதே. அந்த இடம் சகதியாக இருந்ததை கவனித்தோம்.  நிலக்கரி சுரங்கத்தின் உள்ளே தண்ணீர் சிறிய அளவில் கசிவதையும் அறிந்தோம்.  அப்போதே நிலக்கரி சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுலாம் என்று சந்தேகப்பட்டோம்.  உயிருக்கு  உத்தரவாதமில்லை என்பது நன்கு தெரியும். ஆனால் இந்த ஆபத்தான வேலையை செய்யவில்லை என்றால் எங்கள் குடும்பத்தினருக்கு ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காது” என்று தெரிவித்துள்ளனர்.