ஷில்லாங்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 2,334 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்றாமலேயே இருந்தது.

ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. அம்மாநிலத்தில் ஏப்ரல் 13 அன்று ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போதுள்ள ஊரடங்கினை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க அம்மாநில அரவு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், கிராமப்புறங்களில் விவசாயத்தை அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளது.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கின் பெத்தானி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு சோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அவருக்கு எந்தவித வெளிநாட்டு பயண வரலாறும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மட்டுமே கொரோனா பரவாத மாநிலமாக உள்ளது. மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.