மேகதாது அணை விவகாரம்: மத்தியஅமைச்சர்கள் சதானந்த கவுடா, நிர்மலாவுடன் கர்நாடக அமைச்சர், எம்.பி.க்கள் ஆலோசனை

டில்லி:

மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்த விவகாரத்தை  எதிர்த்து தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில், கர்நாடக மாநில எம்.பி.க்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்தியஅமைச்சர்கள் சதானந்த கவுடா, நிர்மலா சீத்தாராமுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமாரும் ஈடுபட்டுள்ளார்.

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்

‘காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த  திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது நடை பெற்று வரும் பாராளுமன்ற தொடரிலும் எதிரொலித்து வருகிறது. அதிமுக, திமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் மாநில எம்.பி.களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் சதானந்த கவுடா மற்றும், கர்நாடக பாஜக வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும், கர்நாடக எம்.பி. முனியப்பா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகா அர்ஜுன் கார்கே உள்பட பலர்  பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழக எம்.பி.க்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல்  கொடுக்கவும், பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தவும் கர்நாடக எம்.பி.க்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, மேகதாது அணை தமிழகத்திற்கே அதிக பயன் தரும் என்றும்,  மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.