மேகதாது அணை கட்ட அனுமதி: உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மனு தாக்கல் செய்தது

சென்னை:

காவிரியின் நடுவே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கும் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக மாநில அரசு புதிய அணை கட்ட முடிவு செய்து, அதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது.

கர்நாடகா அரசின் முடிவுக்கு, ஏற்கனவே உச்சநீதி மன்றம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளை மீறி மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கும், அனுமதி அளித்த மத்திய அரசுக்கும் எதிராக உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும் கூறி உள்ளது. மேலும், தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக மனுவில் புகார் கூறி உள்ளது.

மேலும் மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடைவிதிக்க வேண்டும். வரைவுத் திட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது, தமிழக அரசின் மனு மீது முடிவு எடுக்கும் வரை அணை திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும், மேகதாது அணை கான வரைவு அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற நீர் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு உள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.