ஸ்ரீநகர்: மீண்டும் தம்மை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்தார்.

மத்திய அரசானது, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பல தலைவர்களும் ஓராண்டுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மெகபூபா 14 மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 14ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந் நிலையில் அவர் மீண்டும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வந்ததால் தற்போது மீண்டும் வீட்டுச்சிறையில் தாம் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அரசின் மீதான எதிர்ப்புகளைத் தடுக்க தடுப்புக் காவல் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த கருத்தையும் கேட்காமல் ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையையும், துயரத்தையும் ஏற்படுத்த இந்திய அரசு விரும்புகிறது என்று கூறி உள்ளார்.