காஷ்மீர் முதல்வராக இருந்தபோது 6 மாத காலத்தில் ரூ.82 லட்சம் செலவழித்த மெகபூபா முப்தி! ஆர்டிஐ தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர்  மாநில  முதல்வராக பதவியில் இருந்தபோது 6 மாத காலத்தில் ரூ.82 லட்சம் மெகபூபா முப்தி தனது சொந்த வீட்டை புதுப்பிக்க செலவழித்துள்ளது  ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரிக்கப்படாத ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் மெகபூபா கட்சி  கடந்த 2018ம் ஆண்டு ஆட்சி நடத்தியது. பின்னர், பாஜக ஆதரவை விலக்கியதும், ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில், காஷ்மீர் மாநில  சமூக ஆர்வலர் இனாம்-உன்-நபிசெளத்கர் என்பவர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர்  01ஆம் தேதி, மெகபூபா முக்தி முதல்வராக இருந்தபோது செலவழித்த தொகை குறித்து பல்வேறு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த மத்திய அரசு, “மெகபூபா முப்தி 2018ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6மாதங்களில் ஸ்ரீநகரின் குப்கர் சாலையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வமான இல்லத்தை புதுப்பிக்க ஏறத்தாழ 82 லட்சம் ரூபாய் அரசின் பணத்தைச் செலவழித்துள்ளார்.

2018 மார்ச் 28 ம் தேதி தரைவிரிப்புகளை வாங்க ஒரே நாளில் ரூ.28 லட்சம் செலவிட்டுள்ளார்.

2018 ஜூன் மாதம் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள எல்.ஈ.டி. டிவி உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளார்.

பிப்ரவரி 22ந்தேதி அன்று  2018 அன்று 11 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய்க்குப் போர்வைகள் வாங்கியுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இரண்டு ஆண்டு காலப்பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள கட்லரி பொருள்களை வாங்கியுள்ளார்.

ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 314 ரூபாய் மதிப்புள்ள தோட்டக் குடைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 30, 2017 அன்று 14 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இந்த செலவினங்கள் அனைத்தும் மத்திய அரசால் செலுத்தப்பட்டது.

என  ஆர்.டி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. இதில் 2018ம் ஆண்டு மட்டும் சுமார் ஆறு மாத காலத்தில் ரூ.82 லட்சம் அரசின் பணத்தைச் செலவழித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

You may have missed