ஆன்டிகுவாவில் புதிய பாஸ்போர்ட் பெற்றார் மெகுல் சோக்சி….அதிர்ச்சி தகவல்

டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். அவரது நெருங்கிய உறவினராக மெகுல் சோக்சியும் வெளிநாடு சென்றுவிட்டார். இது குறித்து சிபிஐ, அமலாக்க துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரது பெயரில் இருந்த இந்திய பாஸ்போர்ட்களும் முடக்கப்பட்டது. இருவரையும் கைது செய்ய ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்க இன்டர்போல் உதவியை இந்திய விசாரணை முகமைகள் நாடியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வந்ததாக கூறப்பட்ட மெகுல் சோக்சி அங்கிருந்து கெரிபியன் பிராந்தியத்தில் உள்ள ஆன்டிகுவாவுக்கு இந்த மாதம் சென்றுள்ளார். அங்கு கெரிபியன் பாஸ்போர்ட்டை அவர் பெற்றிருப்பதாக அமலாக்க துறையினருக்கு ஆன்டிகுவாஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெகுல் சோக்சியை கைது செய்ய தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அவர் வேறு ஒரு நாட்டு பாஸ்போர்ட் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.