மெகுல் சோக்சி விவகாரம் : அருண் ஜெட்லி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி

மெகுல் சோக்சியிடம் மகள் பணம் வாங்கியதால் அமைச்சர் அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

பிரபல நகை வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவர் கூட்டாளி மெகுல் சோக்சி ஆகியோர் வங்கியில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய சிபிஐ முயன்று வருகிறது. மற்றொரு தொழிலதிபரான விஜய் மல்லையாவும் வங்கி மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடி லண்டனில் இருப்பது தெரிந்ததே.

சோனாலி ஜெட்லி

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி மற்றும் மருமகன் ஜெயேஷ் பக்‌ஷி ஆகியோருக்கு மெகுல் சோக்சி ரூ. 24 லட்சம் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியது. அதனால் தான் மெகுல் சோக்சி விவகாரத்தில் அருண் ஜெட்லி தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அருண் ஜெட்லியின் மகளும் மருமகனும் மெகுல் சோக்சியின் வங்கிக் கணக்கில் ரூ. 24 லட்சம் பணம் செலுத்தியது தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் குஜராத் உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், “மெகுல் சோக்சி பற்றி முழுவதும் தெரிந்துக் கொண்டே அருண் ஜெட்லி அவரை நாட்டை விட்டு தப்பி ஓட விட்டுள்ளார். அவர் நாட்டை விட்டு ஓடிய சில நாட்களில் அருண் ஜெட்லியின் மகளும் மருமகனும் ரூ.24 லட்சத்தை அவர் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளனர். காரணம் இல்லாமல் இத்தனை பெரிய தொகைய ஏன் அவர்கள் செலுத்தினார்கள்?

இதில் இருந்து அவர்கள் இருவரும் மெகுல் சோக்சியிடம் இருந்து பணம் பெற்றுள்ளதும் அவர் நாட்டை விட்டு ஓடியதால் பயந்து போய் பணத்தை திரும்ப செலுத்தியதும் தெளிவாகி உள்ளது. இதனால் அருண் ஜெட்லி உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடிக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.