மேகதாது, ஸ்டெர்லைட்: இன்று தமிழகஅமைச்சரவை கூட்டம்

சென்னை:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மற்றும், மேகதாது அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அனுமதி மற்றும் கஜா புயல் நிவா ரணம் குறித்து விவாதிக்க இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இன்று பிற்பகல் கூடும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(பைல் படம்)

13 பேர் உயிர்களை காவுகொண்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து, ஆலையை மூட உத்தரவிட்டிருந்த  நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று உத்தரவிட்டு உள்ளது.

இது தூத்துக்குடி பகுதி மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள்  மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக  பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் வேளையில், தமிழக அரசு சார்பில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பகல் 12 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம், சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் மற்றும் மேகதாது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.