மேகதாது அணை அனுமதி விவகாரம்: உச்சநீதி மன்றத்தை அணுக தமிழகஅரசு முடிவு

சென்னை:

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட, மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரும் முடிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் கர்நாடகவில் இருந்து வரும் காவிரி நீரை தடுக்கும் நோக்கில், கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட முடிவு செய்துள்ளது.  சுமார், 5,912 கோடி ரூபாய் செலவில் அணை கட்டப்படும் என்றும், இதன் காரணமாக சுமார் 66 டிஎம்சி தண்ணீர் வரை தேக்கி வைக்க முடியும் என்றும் தெரிவித்து செயல்திட்ட அறிக்கையை தயாரித்து, அதை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியிருந்தார். அதில் உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

இந்த நிலையில், மேகதாது அணை செயல்திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகளிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வர் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரிவழக்கு தொடர்வது பற்றியும்  மூத்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி சார்பில் அவசர கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

அதில், மேகதாது அணை கட்ட கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும், இந்த அனுமதி  காவிரி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள்  என அதில் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட வழங்கப்படவுள்ள  மத்திய சுற்றுச்சூழல் கொடுத்துள்ள அனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர முடிவு செய்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதமும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.