சென்னை:

ர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகதாது மலைப்பகுதியில் அணை கட்டி தண்ணீரை சேமிக்க  கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டினால், தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கும் தண்ணீரும் நிறுத்தப்பட சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில், மேகதாது அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆனால், தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, கர்நாடக அரசு, மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 19 ஆம் தேதி மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா அரசு தாக்கல் செய்துள்ள திட்ட அறிக்கை குறித்து  சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்,  மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா செயல்படுவதாக மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும்,  மேகதாது அணைக் கட்ட கர்நாடகா அரசு இதுவரை தமிழகத்திடம் எந்த வித ஆலோசனகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு எதிராக செயல்படும் கர்நாடகா அரசின் கோரிக்கையை வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள சுற்றுச்சூழல் அமைச்சகக் கூட்டத்தில் மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் மத்திய அமைச்சர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.