மேலவளவு கொலை வழக்கு கைதிகள்: விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

மதுரை :

மிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு கொலை குற்றவாளிகளை, அண்ணா, எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு முன்கூட்டியே தமிழகஅரசு விடுவித்த நிலையில், விடுவிக்கப்பட்ட ஆயுள் கைதிகள் 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், 13 பேரின் விடுதலை குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை 27ந்திக்கு ஒத்திவைத்தது.

மறைந்த அரசியல் தலைவர்கள்  பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருவது வழக்கம். அதன்படி, எம்ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி,  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு கொலைவழக்கு கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து,   வக்கீல் ரத்தினம் என்பவர், ஐகோர்ட் கிளை மதுரையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின்போது,   ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரை எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்று சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 13 பேர் விடுவிக்கப்பட்டதற்கான அரசாணை மற்றும் அனைத்து ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி, நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ‘பதில் மனு மற்றும் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதே சமயம் மனுதாரர் தரப்பில், 13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இதை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும், நீதிமன்றத்தின் நோட்டீஸ் கிடைக்க மேலூர் டிஎஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 27ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.