மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் 2வது பெரிய நகரமான மெல்போர்னில் 6 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
உலகம் முழுவதும் 210க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் மெல்போர்னில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளை நள்ளிரவு தொடங்கி அடுத்த 6 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா, நியூ சவுத்வேல்ஸ் மாகாண எல்லைகள் மூடப்படுகின்றன. 100 ஆண்டுகள் இந்த எல்லைகள் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 24 மணி நேரத்தில் 191 பேருக்கு தொற்று உறுதியானதால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் தொற்று பரவல் குறித்து கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் நெருக்கடி முடிவுக்கு வந்து விட்டதாக கூற முடியாது என்று மாகாண அதிகாரி டேனியல் ஆண்ட்ரூஸ் கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
இந்த நிலைமை மிகவும் சவாலானதாக இருக்கும். மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்றுக் கொள்ளலாம். கொரோனா தொற்று அதிகரிப்பால் வேறு வழியில்லை என்றார்.
விக்டோரியாவில் வசிப்பவர்கள் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பின் சிறப்பு அனுமதி பெறலாம். சரக்குப் போக்குவரத்து பணியாளர்கள் எவ்வித அனுமதியும் இன்றி எல்லையைக் கடக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 8,755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 106 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் பெரும்பான்மையான பாதிப்பு மெல்போர்ன் நகரத்தில் பதிவாகி உள்ளது, குறிப்பிடத்தக்கது.