‘மீம்ஸ்’ எங்களுக்கு பிபி இல்லாமல் பார்த்துக்கொள்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் ருசிகரம்

--

சென்னை:

விகடன் மாணவர் பத்திரிகையாளர்  திட்டம் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நானும், பாஜக தலைவர் தமிழிசையும்தான் மீம் கிரியேட்டர்களுக்கு டார்ககெட் என்றும், மீம்ஸ் எங்களுக்கு பிபி ஏறாமல் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார்.  ருசிகரமாகபேசினார்.

ஊடகத்துறையில் சாதனை படைக்க நினைக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பத்திரிகைத் துறை குறித்த புரிதலைக் கொடுப்பதற்காக மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை விகடன் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

இந்தஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மாணவ பத்திரிகையாளர்களுக்கு  ஊடகத் துறை குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கட்சி தலை வர்கள் மட்டுமின்றி ஊடகத்துறையினரும் கலந்துகொண்டனர்.

விகடன் மேலாண்மை இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்கள் மாணவர்களுக்கு இந்த திட்டம் குறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, “நாம் எதற்கு பேச வேண்டும். எழுத வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். எல்லாம் மக்களுக்காகத்தான் எழுதுகிறோம் என்பதை உணர வேண்டும். எழுதும் முன்னர் அது பெண்களை, குழந்தைகளை, சிறுபான்மையினர் மக்களை பாதிக்குமா என யோசித்து எழுத வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய  ஃப்ரன்ட்லைன் இதழ் ஆசிரியர் விஜய்சங்கர் பேசுகையில்,  ஊடகங்களில் அச்சு ஊடகம் தான் அடிப்படை. தொலைக்காட்சி ஊடகம் முக்கியமானது தான்.  ஆனால் அடிப்படை யானது அச்சு ஊடகம் தான். அதை தேர்வு செய்துள்ளது உங்களுக்கு நல்ல துவக்கமாக இருக்கும். நம்மை தொழில்நுட்ப வசதிகள் சோம்பேறி ஆக்கியிருக்கிறது. ஊடகங்களுக்கு முக்கிய பணி இருக்கிறது. சமூக அக்கறையோடு கமர்ஷியலும் இருக்க வேண்டும் என்றார்.

டைம்ஸ் நவ் பத்திரிகையாளர் ஷபீர் அகமது பேசுகையில், “மாணவப் பத்திரிகையாளர் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. பல ஆளுமைகளை இந்த வாய்ப்பு தான் உருவாக்கியிருக்கிறது.  பத்திரிகையாளர் பணி மக்கள் சேவை பணி என்றுதான் சொல்ல வேண்டும்.
பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படையான தகுதி, ‘தெரிந்து கொள்ள வேண்டும்’ என்ற தேடுதல். ஒரு பத்திரிகையாளர், சமூகத்தில் தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு செய்தியாளர் மக்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். செய்தியாளராக உங்களுக்கு சமூக பொறுப்பும், அக்கறையும் மிக அவசியம்,” என்றார்.

இன்றைய 2வது நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், பாஜ தலைவர் தமிழிசை,விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொல்.திருமாவளவன் பேசும்போது, மாணவ பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது  கிரிமிலேயர் என்பது பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு. சமூக நீதி என்பதில் சமூக அந்தஸ்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு சமூக அந்தஸ்து வழங்குவது தான் சமூக நீதி. சமூக அந்தஸ்து யாருக்கெல்லாம் மறுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கு அந்த அந்தஸ்தை ஏற்படுத்தித்தர அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்.
பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடான கிரிமிலேயர் முறை மேலோட்டமாகப் பார்க்க நியாயமாகத் தின்றும். ஆனால் சமூக நீதி என்ற கோட்பாடு அதில் அடி வாங்கும். எனவே தான் கிரிமிலேயரை நாங்கள் எதிர்க்கிறோம்.
தமிழ் தேசியம் பேசுபவர்கள் மீது சாதி குறித்த புகார்களை அவர்கள் வைக்கிறார்கள். தமிழன் தான் தமிழனை அடிக்கிறார். என்ற கேள்வி நியாயம் தான். இதை சித்தாந்தங்களுடன் பொருத்திப்பார்த்து விவாதித்துதான் ஆகவேண்டும். சாதிப் பிரச்னைகளை பெரிதுப்படுத்தினால் ஒற்றுமை சிதைந்துபோகும் என்ற அச்சமும் இருக்கிறது. ‘சாதி பேசினால் நட்பு சிதையும்; எல்லா ஜனநாயக சக்தியை அச்சப்படுத்தும்’ என்ற அச்சமும் உள்ளது. இதை மீறி விவாதித்து விடைகாண வேண்டும்.

இது நீண்டகாலமாக இருக்கும் பிரச்னை. எல்லா சாதிகளுக்குமிடையே தடுப்புச்சுவர் இருக்கிறது. நிர்வாக காரணங்களுக்காக தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு பிரிவிலும் பல சாதிகள் இருக்கிறது. எல்லா சாதிகளுக்கு இடையிலும் தடுப்புச்சுவர், தீண்டாமை இருக்கிறது. அது தலித் மக்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஊடக வெளிச்சத்தால் இது வெளியே தெரிகிறது. தலித் சமூகத்தில் 78 சாதிகள் தமிழகத்தில் இருக்கிறது. இதில் முரண்பாடுகள் இருக்கிறது. இதை ஒப்புக்கொண்டு விவாதித்து தீர்வை எட்ட வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, அவரிடம் மாணவ பத்திரிகையாளர்கள்  உங்களிடம்  10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் என்ன நலத்திட்டம் செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு  அமைச்சர் ஜெயக்குமார், நாட்டின்  அடிப்படை கட்டமைப்பு வசதி முக்கியம். எனவே ரோடு, பாலம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என்றார்.  இப்போது உருவான கட்டடங்கள், சாலைகள் எல்லாம் தொலை நோக்கு அடிப்படையில், அமைக்கப்பட் டவைதான்.  தொலைநோக்கு பார்வையோடு இயங்க வேண்டும். வாகனங்கள் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 4 கோடியாகி விடும். சாலைகள் என்பது போக்குவரத்து தேவைக்கு அத்தியாவசியம். இதோடு மாநிலத்துக்கு முதலீடு வருவது நல்லது. அதற்கு உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டியது அவசியம்.

உங்களைப் பற்றிய மீம்ஸ் பற்றி? கூறுங்கள் என மாணவர்கள் கேட்டதற்கு,  பதில் அளித்த அமைச்சர்  ஜெயக்குமார் , மீம் கிரியேட்டர்களுக்கு நாங்க ரெண்டு பேரும் தான் டார்கெட். ஒருமுறை ஒரு மீம் வந்துச்சு. என் தலை படத்தை போட்டு, பக்கத்துல என் தலையில முடி முளைச்ச மாதிரி இன்னொரு படத்தைப் போட்டு ரெண்டு போட்டோவுக்கு நடுவுல அஸ்வினி ஆயில் பாட்டிலை வைச்சுட்டாங்க.

இந்த மீம்ஸை நான் என் பேரன், பேத்தியோடு ரசித்துப்பார்த்தேன். அதே மாதிரி சகோதரி (தமிழி சையைப் பார்த்து) தாமரை மலர்ந்தே தீரும்னு சொன்னதுக்கு, எனக்கு முடி இருக்குற மாதிரி படத்தைப்போட்டு இப்படி நடந்தாலும் நடக்கும். அது நடக்காதுன்னு மீம் போட்டிருந்தாங்க.

இதைப் பார்த்தும் நான் சிரிச்சேன். இவை எங்களை கிண்டல் செய்வதாக எடுத்துக்கொள்ள வில்லை. எங்களுக்கு பிபி இல்லாமல் பார்த்துக்கொள்கிறது என்றார்.

அதையடுத்து பேசிய பாஜ தலைவர் தமிழிசை,   ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’
‘மழை வந்தால் குளம் நிரம்பும். குளம் நிரம்பினால் தாமரை மலரும்’
‘இலைகள் துளிர்க்கிறதோ இல்லையோ…
சூரியன் உதிக்கிறதோ இல்லையோ…
பழங்கள் பழுக்கிறதோ இல்லையோ…
பம்பரம் சுழல்கிறதோ இல்லையோ…
தாமரை மலர்ந்தே தீரும்”  இவை எல்லாம் சுவாரஸ்யமான பிரச்சாரங்கள் தான் என்றார்.

என்னை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். சமூக கருத்தோடு இருந்தால் அதை நான் மதிப்பேன். நிறம், முடியை வைத்துதான் மீம் போடுகிறார்கள். சிவப்பா, அழகா இருப்பவர்கள் மீம்ஸில் வரமாட்டார்கள் போல என நினைப்பதுண்டு. இந்த மீம்ஸ் என்னை காயப்படுத்துவதில்லை. மாறாக அதில் அவர்களின் பிம்பம் வெளிப்படுகிறது.

அதைதொடர்ந்து மாணவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம்  அம்மா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு இவை மூன்றும் ஒரே அரசு தான். அம்மா ஆட்சி தான். இப்போதும் அம்மா ஆட்சி தான் நடக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியிடம் உங்களுக்குப் பிடித்தது எது?

அவரது நகைச்சுவைத் திறன் எனக்குப் பிடிக்கும். சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையுடன் பதில் அளிக்கும்  தலைவர் கருணாநிதி  அது எனக்கு பிடிக்கும்.

கேள்வி : 8 வழிச் சாலைக்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதை ஆதரிக்கிறீர்கள். உங்களுக்கு நிலம் இருந்தால் கொடுப்பீர்களா?

தமிழிசை : எனக்கு நிலம் இருந்தால், நான் மகிழ்ச்சியாகக் கொடுப்பேன். சாலை என்பது பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும். எனவே நிலத்தை மகிழ்ச்சியுடன் கொடுப்பேன்.

அரசியல் எனும் ஆயுதம்’ எனும் தலைப்பில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “மாணவப்பருவத்தில் நினைத்ததை சாதிக்க முடியும். வாள் முனையை விட பேனா முனை சக்திவாய்ந்தது. எனவே சமூகத்துக்கு நன்மை பயக்கும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “மாணவப்பத்திரிகையாளர் திட்டம் மூலம் மிகச்சிறந்த பத்திரிகையாளர்களை விகடன் உருவாக்கி வருகிறது. இது உங்களுக்கு அரிய வாய்ப்பு. ஊடகம் உலகத்தையே ஆட்டிபடைக்கும் வல்லமை கொண்டதாக ஊடகங்கள் மாறியிருக்கிறது. எல்லோரும் ஊடகவியலாளர்களாக மாறிவிட்டோம். சமூக வலைதளம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்த சூழலில் சிறந்த செய்தியாளராக உருவாக இந்த பயிற்சி உங்களுக்கு பயன்படும்.

அதேபோல், மனிதநேயம், பெண்ணியம், விளையாட்டு, பொருளாதாரம் குறித்த  புரிதல்களும் உங்களுக்கு தேவை.  செய்தி சேகரிப்பது செய்தியை பதிவு செய்வது மட்டுமல்ல. சித்தாந்தங்களின் புரிதல்களுடன் செய்தி சேகரிப்பதே உங்கள் பணி இருக்க வேண்டும்,” என்றார்

மேலும் இன்றைய முகாமுக்கு  நீயா நானா கோபிநாத், ‘உன்னை உணர்’ எனும் தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், “எதிர்பாராத பல சவால்கள் உங்களுக்கு உள்ளது. 15 வருடம் முன்பு எழுத தெரிந்தால் போதுமானது. ஆனால் ஜர்னலிஸத்தின் முகம் மாறி வருகிறது. ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக மாறி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய மாற்றம். இந்த மாற்றத்துக்கு நீங்கள் தயாராவது அவசியம்.

நன்றி: விகடன்