லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு கையெழுத்தாகியுள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சுகாதாரத்துறை சார்பிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இன்று மேற்கொண்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, உலக புகழ் வாய்ந்த லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் கிளைகளை தமிழ்நாட்டில் நிறுவிட, தமிழக அரசு மற்றும் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை இடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

முன்னதாக தொற்றுநோய் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன், டெங்கு, மலேரியா நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அந்நோய்களை கையாளும் வழிமுறைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.