டான்சானியா: பள்ளிச்சிறுமிகளை திருமணம் செய்தால் இனி 30 ஆண்டுகள் சிறை

--

பள்ளிச்சிறுமிகளை திருமணம் செய்தாலோ அல்லது கர்ப்பமாக்கினாலோ 30 ஆண்டு சிறை தண்டனையை டான்சானியா அரசு விதித்து புதிய சட்டம் இயற்றியுள்ளது.

tanzania

டான்சானியா கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு ஏழை நாடாகும். இங்கு பெண்குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள் சடங்கு என்ற பெயரில் அதிகமாக நடந்து வருகிறது. மிகச் சிறு வயதிலேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இந்த நாட்டில் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதே போல காட்டுத்தீ போல பரவும் எய்ட்ஸ் நோய், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் மிகுந்த நாடு இது.

37% டான்சானிய சிறுமிகள் மிக சிறு வயதில் திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். இங்குதான் சிறுமிகள் கர்ப்பமடைவது உலகிலேயே அதிகம். ஐந்தில் ஒரு டான்சானிய சிறுமி 15 -19 வயதுக்குள் கர்ப்பமடைந்து விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த கொடுமகளை தடுக்கும் விதமாக டான்சானிய அரசு பள்ளிச்சிறுமிகளை திருமணம் செய்தாலோ அல்லது கர்ப்பமாக்கினாலோ 30 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்யும் புதிய சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது. இதற்கு முன்னால் 14 வயதான சிறுமிகளை பெற்றோர் விரும்பினால் திருமணம் செய்து வைக்கலாம் என்ற சட்டம் இங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி டான்சானிய அரசு இலவச கல்வித்திட்டத்தை இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. தனது பெண் குழந்தைகளின் படிப்பை தடை செய்து திருமணம் செய்துவைக்க முயற்சிக்கும் பெற்றோருக்கு கடும் எச்சரிக்கை அரசின் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.