மேனகா காந்தி வரை தொட்டுத் தொடரும் பா.ஜ.க. பாரம்பரியம்!

சுல்தான்பூர்: முஸ்லீம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பணி வாய்ப்புகளைத் தருவது குறித்து யோசிக்க வேண்டிவருமென கூறி, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாரதீய ஜனதாவின் மேனகா காந்தி.

முஸ்லீம்களின் வாக்குகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், தான் வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள அவர், தான் காந்தி குடும்பத்தின் வாரிசு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான முறையிலும், அபத்தமான முறையிலும் பேசுவது பாரதீய ஜனதா தலைவர்களுக்கு வாடிக்கையாகவே இருக்கிறது. பிரதமர் மோடி தொடங்கி, கீழ்மட்ட தலைவர்கள் வரை இந்த பண்பாடு அவர்களிடையே பரவியிருக்கிறது. இந்தப் பட்டியலில், மேனகா காந்தியும் இடம்பிடித்துள்ளார்.

கடந்த தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்ட மேனகா காந்தி, இந்தமுறை சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது தொகுதியில் பிரச்சாரம் செய்தபோதுதான், இப்படியான சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

சுல்தான்பூர் தொகுதியில் 17.13% இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‍மேனகா காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அறிக்கை அளிக்கும்படி, உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதன்மை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மக்களவைத் தேர்தலுக்கான தனது கட்சியின் டிக்கெட்டுகளை தலா ரூ.15 கோடிக்கு விற்பனை செய்கிறார் என்றுகூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தமுறை சுல்தான்பூரில் போட்டியிட்ட மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, இந்தமுறை பிலிபிட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

– மதுரை மாயாண்டி