திருவனந்தபுரம்:

பெண்களின் மாதவிலக்கு காலத்தின்போது 5 நாட்கள் விடுமுறை அளிக்க கேரளத்தில் உள்ள  திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்வந்துள்ளது.

மாதவிலக்கு காலங்களின் போது பணிக்கு வரும் பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும்,  அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி காரணமாக பல்வேறு உபாதைளால் பாதிக்கப்படுவதால் அந்த காலங்களில்  பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தியது மும்பையை சேர்ந்த கல்சர் மெஷின் என்ற டிஜிட்டல் மீடியா நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் அறிவிப்பு நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து கேரளாவில், ஊடக நிறுவனமான மாத்ருபூமி  தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களின் போது, முதல்நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக அறிவித்து உள்ளது.

அதைத்தொடர்ந்து  கேரள தனியார் பள்ளி சங்கம் (All Kerala Self-Financing Schools Federation). பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு  அளிப்பதாக அறிவித்து இருந்தது.

 

இந்நிலையில், மாதவிடாய் காலத்தின்போது, பெண்கள் மற்ற நாட்கள்போல பணியாற்ற முடியாது என்பதால், அவர்களுக்கு 5 நாட்களும் விடுமுறை அளிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

அதன்படி தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றி வரும் பெண்களுக்கு 5 நாட்ள்கள் விடுமுறை அளித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. அந்த காலங்களில் அவர்களுக்கு பதிலாக வேறு ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என்று கூறி உள்ளது.

ஆனால், அந்த 5 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையா என்பது அறிவிக்கப்படவில்லை.