‘‘வெறுப்பின் வியாபாரி’’…ராகுல்காந்தி மீது பாஜக பாய்ச்சல்

டில்லி:

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் பசு பாதுகாவலர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் இறந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

‘‘உயிருக்கு போராடிய அக்பர் கானை 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணிநேரம் போலீசார் எடுத்துள்ளார்கள் ஏன்? அவர்கள் செல்லும் வழியில் டி-ப்ரேக் எடுத்துள்ளனர். இதுதான் மோடியின் ஒரு மிருகத்தனமான இந்தியா. இங்கு மனிதநேயம் வெறுப்பால் அகற்றப்பட்டுள்ளது. மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்’’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராகுல்காந்தி ‘ஒரு வெறுப்பின் வியாபாரி’ என மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஒவ்வொரு முறையும் குற்றங்கள் நடைபெறும் போது குதித்து மகிழ்வதை ராகுல்காந்தி நிறுத்த வேண்டும். ஏற்கனவே மாநில அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தலில் வெற்றி பெற எல்லா வழிகளிலும் சமுதாயத்தை பிரிப்பதற்கான சாத்தியக் கூறுகளில் ஈடுபடுவீர்கள். பின்னர் முதலை கண்ணீர் வடிப்பீர்கள். நீங்கள் ஒரு வெறுப்பின் வியாபாரி’’ என்று தெரிவித்துள்ளார்.