திரைவிமர்சனம்: மேற்குதொடர்ச்சிமலை

ரசியல் வசனங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படங்கள் பல உண்டு. இந்தப் படம் அரசியல் அவலங்களை, காட்சிகளாக.. மக்களுக்கு நெருக்கமாக அவர்களது மொழியில் சொல்லியிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கோம்பை எனும் கிராமத்தில் துவங்குகிறது படம்.  ஒற்றையடி பாதைகளில் சுமை தூக்கும் மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறது.

ஆண்டாண்டு காலமாக கூலியாகவே வாழ்ந்து வரும்  தலைமுறையில் பிறந்தவன் கதையின் நாயகன் ரங்கசாமி. சொந்தமாக  நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது அவனது லட்சியம்.

மிகப் பிரயாசைப்பட்டு அதற்காக முயன்றாலும், முயற்சிகள் தோல்வி அடைய..   ஒருகட்டத்தில் நினைத்தது நடக்கிறது. அதன் பிறகு நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே மீதிக்கதை.

கதாப்பாத்திர தேர்வு வியக்கவைக்கிறது. கதைக்களத்தில் வாழும் நிஜ மனிதர்களையே, திரைக்குள் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் லெனின் பாரதி. குறிப்பாக , ஈஸ்வரி, கழுதைக்கார மூக்கையா, வனகாளி, சகாவு  மனநலம் பாதித்த பாட்டி என்று அந்த மனிர்கள் நிஜமாகவே நம்முன் உலவுகிறார்கள்.

வசனங்களும் எதார்த்தம்.

“ கழுதையும் நானும் இருக்குற வரைக்கும் நாங்க இப்படித்தான் சுமப்போம்..”

“ ஒரு கம்யூனிஸ்ட் அப்பறம் பாத்துக்கலாம்னு சொல்லக்கூடாது..”

“ரோடு வந்துச்சுன்னா மெஷின் வந்து, மக்களுக்கு வேலை இல்லாம போய்டும்”

–    என்பவை சில துளி உதாரணங்கள்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, படத்துக்கு பெரும் பலம்.  நம் கண்களாகவே படம் முழுக்க பயணிக்கிறது கேமரா.

பல வருடங்களாக சுமை தூக்கிவரும்  முதியவர்,  ஒரு அடை மழை நாளில்  ஏலக்காய் மூட்டை சுமந்த கதையை சொல்ல ஆரம்பிக்க..  மேல் நோக்கி எழும் கேமரா பின்பு வளைந்து செல்லும் பாதையையும், காட்டினையும் நம் கண்களுக்கு கொண்டுவரும் காட்சி ஒரு சோறு பதம்.

மு. காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு கச்சிதம்.

இளையராஜாவின் இசை வழக்கம்போலவே உன்னதம்.

வியாபார சமரசங்களை நிராகரித்து மக்களின் உண்ணை வாழ்க்கையை பதிவு செய்திருக்கும் மேற்குதொடர்ச்சிமலை படத்துக்கு ராயல் சல்யூட்!

நல்ல படத்தை துணிந்து தயாரித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் ஒரு சல்யூட்.

“சூப்பர் ஸ்டார்” ரஜினி நடித்து “பேராளி இயக்குநர்” ரஞ்சித் இயக்கிய  காலா வியாபாரத்தனத்துடன் பேசிய நில உரிமையை, எந்தவித சமரசமும் இன்றி மனதில் பதியும்படி பேசியிருக்கிறது இந்தப்படம்.

ஆம்.. “காலா” சத்தம்.. மேற்குதொடர்ச்சி மலை.. முழக்கம்!

 

கார்ட்டூன் கேலரி