விமர்சனம்: அதீதன் திருவாசகம்

ளைய தளபதி … சாரி….சாரி… தளபதி விஜய்ணாவைக் கண்டிப்பாக பாராட்டித்தான் ஆக வேண்டும். அதற்கு  மெர்சலின் கதை தெரிய வேண்டும்.

மருத்துவத் துறையோடு தொடர்புள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர், அட்டெண்டர், மருத்துவர்கள் சிலர் அடுத்தடுத்ததாக கடத்தப்படும் அதே ஷங்கர் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் பாணியில் தொடங்குகிறது படம். அவர்களையெல்லாம் கடத்தியது வழக்கம் போல ஹீரோ விஜய். அவரும் ஒரு மருத்துவர். அவர்களையெல்லாம் ஏன் கடத்தினார், எப்படி கடத்தினார், ஏண்டா கடத்தினார் என்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் நாம் மெர்சலாகி விடுவோம். ஆமாம்.. அப்படியொரு காரணத்தை வைத்திருக்கிறார் இயக்குனர் அட்லீ.

கத்தியில் விவசாயத்தைக் காப்பது குறித்து கம்யூனிச இட்லி சுட்டாரில்லையா விஜய்?. இந்த படத்தில் மருத்துவத்தைக் காக்க கத்தி எடுத்து மேஜிக் நிகழ்த்துகிறார்.

ராஜஸ்தானில் மல்யுத்த வீரராக பயங்கர மாஸாக அறிமுகமாகிறார் மதராஸியான தளபதி வெற்றி மாறன் ( இனிமேல் விஜய் இளைய தளபதி இல்லையாம். ’தளபதி’ தானாம். படத்திலேயே அப்படித்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். டைட்டிலிலும் அப்படித்தான் போடுகிறார்கள். உடன் பிறப்புகள் கவனிக்கவும்) பிறகு மதுரவாசியாக மதுரை மாணூருக்கு வருகிறார். ஊருக்கு கோவில் கட்டுவதற்காகத் தானமாகத் தன் சொந்த நிலத்தைத் தருகிறார். கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் திருவிழாவின் போது பயங்கர தீ விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மதுரை பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். ஆனால், பலனின்றி ஒரு சிறுவனும் சிறுமியும் இறக்கின்றனர். மருத்துவர் சொல்லும் காரணம்,

”ஒரு பத்து நிமிஷத்திற்கு முன்பு வந்திருக்கலாமே”.

ஒரு வேளை அந்த சிறிய கிராமத்திலேயே மருத்துவ வசதியிருந்திருந்தால் உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காதில்லையா? ஆகவே கோயிலுக்குப் பதிலாக இலவச மருத்துவமனை கட்டுகிறார் தளபதியும் அவர் மனைவியும்.

அந்த இலவச மருத்துவமனைக்கு சேவை செய்வதாகச் சொல்லிக் கொண்டு வரும் எஸ்.ஜே சூர்யா காலங்காலமாக வில்லன்கள் என்ன செய்வார்களோ அதையே தவறாமல் செய்கிறார். அதாவது தன்னுடைய சதியால் அந்த மருத்துவமனையை தன்னுடையதாக ஆக்கிக் கொண்டு மருத்துவத்தைப் பெரிய வியாபாரமாக்க நினைக்கிறார். அந்த சதியில் தளபதியும் அவர் மனைவி ஐசும் கொல்லப்படுகின்றனர்.. அப்புறம் என்ன ? சேம் ஓல்ட் ஸ்டோரிதான்.

தளபதிக்குப் பிறக்கும் இரண்டு பையன்களான வெற்றியும் மாறனும் வளர்ந்து பெரியவர்களாகி ….உஸ்ஸ்…. வில்லன் எஸ்.ஜே. சூர்யாவை…உஸ்ஸ்….

அப்பாவைக் கொன்ற வில்லனை, பிள்ளைகள் இருவர் வளர்ந்து பழிவாங்கும் தொல்காப்பியர் காலத்து கதையில் என்ன புதுமையைக் கையாளலாம் என்று யோசித்த இயக்குனர், பிள்ளைகள் இருவரையும் இரட்டையர்களாகக் காட்டாமல் நாலைந்து வருட வித்தியாசத்தைக் காட்டி வித்தியாசம் செய்திருக்கிறார்.  மற்றபடி பெரும்பாலான வில்லன்களுக்கு டேனியல் ஆரோக்கியராஜ் என்று கிருத்துவ பெயர் வைக்கும் தமிழ் சினிமா ஃபார்முலாவையெல்லாம் தவறாமல்தான் செய்திருக்கிறார்.

முதல் பாராவில் விஜயைப் பாராட்ட வந்தது எதற்கென்றால் ஒவ்வொரு படத்திலும் சமூகம் சார்ந்த விஷயத்திற்காக அக்கறைப்படுவதற்காகத்தான். அந்த அக்கறை அவருடைய எதிர்கால திட்டத்திற்காகவோ வேறு எதற்காகவோ இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், நிச்சயமாக விஜயின் இந்த போக்கு பாராட்டப்பட வேண்டியதுதான். காரணம்,  திரளான விடலைப் பையன்களை ரசிகர்களாக வைத்திருக்கும் மாஸான நடிகர் ஒருவர் காமா, சோமாவென கதைகளைத் தேர்ந்தெடுக்காமல், சமூக அக்கறை கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது ஆரோக்கியமான போக்கு தானே!

’கத்தி’ படத்தைப் பார்த்து விட்டு கம்யூனிசம்னா என்னவென கேட்ட பதின் பருவத்துப் பையன்கள் இருக்கிறார்கள். ’பைரவா’வில், கல்வி வியாபாரத்தை ஒரு பிடி பிடித்தவர் மெர்சலில் மருத்துவ வியாபாரத்தின் மீது சாட்டையை வீசியிருக்கிறார். (’டாக்டர் அனிதா’வின் வீட்டிற்கெல்லாம் சென்று அனுதாபம் காட்டினார் அல்லவா? )  அடுத்தடுத்து தமிழ் நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகள் அனைத்திலும் கவனம் செலுத்தப் போகிறார் போலிருக்கிறது. அதற்காக வேட்டியை எல்லாம் மடித்துக் கட்டி ’தமிழன்’ அவதாரத்த்யெல்லாம் தூசு தட்டி எடுத்திருக்கிறார். இடையில் கமல்ஹாசன் வேறு வேட்டியை மடித்து கட்டியவாறு போஸ் கொடுக்கிறார். சரி, அது அவர்கள் பிரச்சினை.

இனி, இயக்குனர் அட்லிக்கு வருவோம். உலகப் படங்களிலிருந்தெல்லாம் கதைகளை உருவ மெனக்கெடாமல், பழைய தமிழ் ’ப்ளாக் பஸ்டர்’களிலிருந்தே கதைகளைக் கண்டடையும் சுதேசி கதையாசிரியர் என்று பெயரெடுத்தவர். ஊர் வாய்க்கு ’பிக் பாஸ்’ கிடைத்த கதையாக இந்த படத்திலும் அப்படியொரு பெயரை எடுத்திருக்கிறார். சோ சேட்.

அதாவது, மகன்கள் இரண்டு விஜய்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களில் ஒருவர் டாக்டர்.  மற்றொருவர் மேஜிக் மேன். ஆனால், குள்ளர் அல்ல. பெயர் அப்பு அல்ல. அப்படி இருந்தால் அபூர்வ சகோதரர்களின் அட்டைக் காப்பி என்று கண்டு பிடித்து விடுவீர்கள் இல்லையா? அதனால்தான் இந்த வித்தியாசம்.  மற்றபடி கதையில் எந்த மாற்றமும் இல்லை. அப்புறம் விஜய்க்கு அந்த சிவப்பு வண்ண சட்டையையும் க்ளைமேக்ஸ் விழிப்புணர்வு வசனங்களையும்  மாற்றியிருக்கலாம். பார்த்துக் கொண்டிருப்பது ’கத்தி’யா என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் மற்றொரு விஷயத்திற்காக அட்லீ பாராட்டப்பட வேண்டியவர்.

யாரோ ஒருவரின் மூலம் கிடைக்கும் கதைக்கருவை உருவி  எடுத்துக் கொண்டு, வேறு சிலரின் ஐடியாக்களை எல்லாம் திரைக்கதையில் சொருகி, பலர் சொல்லும் வசனங்களையெல்லாம் சேர்த்துப் பிசைந்து, ஒரு படமாக உருவான பிறகு, டைட்டில் கார்டில் மட்டும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே நான் ஒர்ரே ஒருத்தன் தான் என்று போட்டுக் கொண்டு, பிறரின் உழைப்பையும் அறிவையும் சுரண்டிக் கொள்ளும் தமிழ்த் திரையுலகில், கதை, திரைகதை, வசனத்தில் பங்களித்தவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டதற்காகத்தான் அட்லீக்கு இந்த பாராட்டு.

அதே சமயம் இந்த கதை, திரைக்கதைக்காகவா ஆந்திரா வரை சென்று பாஹுபலியின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத்தையெல்லாம் பார்க்க வேண்டும் எனவும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.. வசனம் ரமணகிரி வாசன் வசனத்தை சுவாரசியமாகத்தான் எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. ஆனால், நம் முரட்டு ரசிகர்கள் அதைக் கேட்க விட மாட்டேன்கிறார்கள்.

விஜயின் மாஸுக்காகவும் அவருடைய விடலைப் பருவ ரசிகர்களுக்காவும் தான் படம் என்றாகிவிட்ட பிறகு ஏ.ஆர்.ரகுமானிடம் தோன்றும் சலிப்பு இயல்பானதுதான். அதையும் மீறி ‘ நீ தானே’ பாடல் மட்டும் தேறுகிறது. வழக்கமாக பின்னணி இசையில் அவர் ஏதோவொரு ஜாலம் நிகழ்வதும் இதில் மிஸ்ஸிங்.

காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், என மூன்று கதாநாயகிகளில் நித்யா மேனனுக்கு மட்டும் நல்ல அழுத்தமான பாத்திரம். மனதில் நிற்கிறார். சமந்தா , விஜயை “ டேய் தம்பி.. “ என்று கூப்பிடுவதும் விஜய் சமந்தாவை ”சொல்லுங்க்கா’ என் பம்முவதும் அட்லி டச். அட.. வடிவேலு கூட இருக்கிறார். பட் வெறுமனே இருக்கிறார்.

பார்வையாளர்களின் பச்சாதாபத்தை உசுப்பேற்றும் கலையை தன் குருநாதர் ஷங்கரிடமிருந்து நன்றாக கற்றிருக்கிறார் அட்லி . காளி வெங்கட் மற்றும் அவருடைய மகள் தொடர்பான காட்சிகள் அதற்கு உதாரணம்.

மலையாளத்தின் மிகச் சிறப்பான நடிகரான ஹரிஷ் பரேடியை வீணடித்திருக்கிறார்கள். “ஆண்டவன் கட்டளை”யில் அவர் நடிப்பைக் கண்டவர்களுக்கு இது புரியலாம்.

ஒரு இயக்குனர் என்பவர் தன்னுடைய கதாநாயகனை அணு அணுவாக ரசிக்க வேண்டும். குறிப்பாக மாஸ் ஹீரோக்களை. அப்போதுதான் ரசிகர்களுக்கு தரமான மசாலா படம் கிடைக்கும்.  இயக்குனர் அட்லி விஜயை ரசித்து ரசித்து படமாக்கியிருக்கிறார். விஜயின் முக பாவனை, வசன உச்சரிப்புகளிலெலாம் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். அது ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகவே செய்திருக்கிறது. தியேட்டரில் ரசிகர்களைக்  கொண்டாட வைத்துள்ளார். ஆகவே, இன்னொரு விஜய் – அட்லி கூட்டணியை எதிர்பார்க்கலாம். ஆனால், அதிலாவது புதிய கதைக் களனைத் தேர்வு செய்ய வேண்டும் அட்லி. திறமிசாலியான அட்லி அதைச் செய்வார் என நம்புவோம். அதே சமயம் ரசிகர்களைப் பயங்கரமாக இம்ப்ரஸ் செய்கிறேன் பார் என்று ’தெறி’, ‘மெர்சல்” என்று கதைக்கு சம்பந்தமில்லாத டைட்டில்கள் வைப்பதையும் மாற்றிக் கொள்வார் எனவும் கூட.

க்ளைமேக்சில் விஜய் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவராகி விட்டு எதோவொரு கட்டிடத்தின் படிகளில் ஏறுவதாகாகக் காட்டுகிறார்கள். நமக்கென்னமோ அது தலைமைச் செயலக கட்டிடம் போல தெரிகிறது.

அடுத்தவர்களின் கனவுகளில் நாம் தலையிட முடியாதல்லவா?