மாட்ரிட்: மறைந்த அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மைதானத்தில் தனது பனியனைக் கழற்றிய மெஸ்ஸி மற்றும் அவரின் பார்சிலோனா அணியினருக்கு, கால்பந்து விதிமுறையின்படி மொத்தமாக 780 யூரோக்கள்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒஸாசுனா அணியுடனான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோ அணி வென்ற பிறகு, மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தனது பனியனைக் கழற்றினார் மெஸ்ஸி. இதற்குத்தான் இந்த அபராதம். அவரின் இந்த செய்கைக்காக அவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

‍இந்த செயலுக்காக, மெஸ்ஸிக்கு மட்டும் 600 யூரோக்கள் தனியாகவும், அவரின் அணிக்கு மொத்தமாக 180 யூரோக்களும் என்று, மொத்தமாக 780 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஸ்பானிஷ் கால்பந்து சங்கத்தினுடைய இந்த முடிவுக்கு, பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே, மெஸ்ஸி மற்றும் அணியினர் இதை செய்ததால், அபராதத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளன.

ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்துள்ள அச்சங்கம், மைதானத்தில் சட்டையைக் கழற்றுவதன் பொருட்டு, இந்தக் குறைந்தபட்ச அபராதத்தை விதிப்பதாக தெரிவித்துள்ளது.