சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை!

ரியோடிஜெனிரோ: தென்அமெரிக்க கால்பந்து சங்கம் குறித்து கடுமையான விமர்சனம் செய்ததற்காக, சர்வதேச கால்பந்து விளையாட்டிலிருந்து 3 மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதோடு, 50,000 அமெரிக்க டாலர் அபராதத்திற்கும் ஆளாகியுள்ளார் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லயொனல் மெஸ்ஸி.

கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பிரேசில் நாட்டில் நடந்த 2019ம் ஆண்டுக்கான கோபா அமெரிக்க கால்பந்து தொடரில், அரையிறுதிப் போட்டி ஒன்றில் தனது பரம எதிரியான பிரேசில் அணியை எதிர்த்து விளையாடியது அர்ஜெண்டினா. அப்போது, அர்ஜெண்டினாவுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய 2 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அப்போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் அர்ஜெண்டினா தோல்வியடைந்தது. ஆனால், மூன்றாமிடத்திற்காக சிலி அணிக்கு எதிராக நடந்தப் போட்டியில் அர்ஜெண்டினா 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது.

இந்நிலையில்தான் தென்அமெரிக்க கால்பந்து சங்கத்தில் ஊழல் நிலவுகிறது என்றும், அந்த அமைப்பில் பிரேசில் நன்றாக ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து அவருக்கு 3 மாத தடையும், 50000 அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல நட்புரீதியான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை மெஸ்ஸி இழப்பார் என்று கூறப்படுகிறது.