பார்சிலோனா: கிளப் அணி ஒன்றுக்கு அதிக கோல் அடித்த வீரர் என்ற பீலேவின்(பிரேசில்) சாதனையை சமன்செய்துள்ளார் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி.

இவர்கள் இருவரும் மொத்தம் 643 கோல்கள் அடித்துள்ளனர். தற்போது, பார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் மெஸ்ஸி, வாலென்சியா அணிக்கு எதிராக கோல் அடித்தபோது இந்த சாதனையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டைவ் அடித்து தலையால் முட்டி, இந்த கோலை அடித்தார் மெஸ்ஸி.

பிரேசிலின் பீலே, மொத்தம் 665 போட்டிகள் விளையாடி இந்த சாதனையை செய்தார். ஆனால், மெஸ்ஸிக்கு இந்த சாதனையை செய்வதற்கு 748 போட்டிகள் தேவைப்பட்டுள்ளன.

அதேசமயம், சீசன்கள் எண்ணிக்கை என்று வரும்போது, மெஸ்ஸி 17 சீசன்களிலும், பீலே 19 சீசன்களிலும் இதை சாதித்துள்ளனர்.

தற்போது 80 வயதாகும் பீலே, கடந்த 1956ம் ஆண்டு தனது 15 வயதில், ஐரோப்பிய கிளப் அணிக்காக தனது ஆட்டத்தை துவக்கினார். மெஸ்ஸி, கடந்த 2004ம் ஆண்டு, தனது 17வது வயதில் ஐரோப்பிய கிளப் அணிக்கான தனது ஆட்டத்தை துவக்கினார்.