என்னை நல்ல வீரராக்க உதவியவர் மெஸ்ஸி – சொல்வது ரொனால்டோ!

பார்சிலோனா: அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியுடன் தனக்கிருந்த போட்டி தொடர்பான எதிர் உணர்வு தன்னை ஒரு நல்ல விளையாட்டு வீரராக தக்கவைக்க உதவியதாக கூறியுள்ளார் போச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

நட்சத்திர வீரர் ரொனால்டோ ரியல் மேட்ரிட் கிளப் அணியில் ஆதிக்கம் செலுத்தியதைப் போன்று, மற்றொரு நட்சத்திர வீரர் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் ஆதிக்கம் செலுத்துபவர். கிளப் அணிகளுக்காக பல போட்டிகளில் எதிரெதிராக மோதியுள்ளவர்கள். இந்நிலையில்தான் ரொனால்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “மெஸ்ஸியின் ஆட்டத்தை நான் மிகவும் மதிக்கிறேன் மற்றும் விரும்புகிறேன். நான் ரியல் மேட்ரிட் அணியைவிட்டு விலகியது குறித்து அவர் தனது ஏமாற்றத்தை தெரிவித்திருந்தார். எங்களின் போட்டிக்கான எதிர்நிலையை அவரும் ஏற்றிருந்தார்.

எங்களுக்குள் இருந்தது ஒரு நல்ல போட்டி மனப்பான்மை. ஆனால், அது தனித்தன்மை வாய்ந்தது என்று கூறமுடியாது. கூடைப்பந்து மற்றும் ஃபார்முலா 1 போன்ற விளையாட்டுகளிலும் இதுபோன்ற போட்டியாளர்கள் உண்டு. அதன்மூலம் அவர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இந்தப் போட்டி மனப்பான்மையின் மூலமாக என்னை மெஸ்ஸியும், அவரை நானும் சிறப்பாக உருவாக்கியுள்ளோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக கிளப் அணிகளில் விளையாடி வருவதால், எங்களுக்குள் ஒரு நல்ல தொழில்முறையிலான உறவு இருக்கிறது.

அவர் ஏதேனும் கோப்பை வென்றால் அது என்னைத் தூண்டும் மற்றும் நான் ஏதேனும் கோப்பை வென்றால் அது அவரைத் தூண்டும்” என்றார் மெஸ்ஸி.

இந்த இரு வீரர்களும், கவுரவம் வாய்ந்த Ballon d’Or விருதை தலா 5 முறை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.