மீண்டும் களமிறங்க ஆர்வமுடன் காத்திருக்கும் கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி!

பார்சிலோன்: ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற உள்ளூர் கால்பந்து தொடரான ‘லா லிகா’ தொடரில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி.

இத்தொடரில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் 32 வயதான மெஸ்ஸி. கொரோனா பரவல் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிந்தது. ஆனால், ஜுன் 12ம் தேதி இத்தொடர் மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது; ஆனால், ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில்.

இந்நிலையில் மெஸ்ஸி கூறியுள்ளதாவது, “இந்தாண்டில் நாம் இழந்த விஷயங்கள் பற்றி சிந்திப்பது வீண். இனிவரும் நாட்களைப் பற்றி சிந்திப்போம். நாட்கள் டைவெளிவிட்டு களமிறங்குவதால், சக வீரர்களை சந்திப்பது, பயிற்சியில் பங்கேற்பது உள்ளிட்ட பல விஷயங்கள் சற்று புதுமையாக இருக்கும்.

அதேசமயம், போட்டியில் பங்கேற்பது பற்றி நான் அதிகம் ஆவலுடன் இருக்கிறேன். ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் விளையாடுவது விசித்திரமான அனுபவமாக இருக்கும்.

கோபா அமெரிக்க கால்பந்து தொடர் தள்ளிவைக்கப்பட்டிருப்பதில் எனக்கு ஏமாற்றம்தான். ஆனால், காரணம் சரியானது எனும்போது வருந்த வேண்டியதில்லை. விரைவில் இத்தொடரில் பங்குபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் மெஸ்ஸி.