கேரளாவில் தொடரும் கனமழை: 20 பேர் பலி, மீட்பு பணியில் ராணுவம்

 

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பேய் மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து  கேரள முதல்வர் வேண்டுகோளுக்கிணங்க ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் ஆணையம் போன்றவை மீட்பு பணியில் இறங்கி உள்ளன.

இதற்கிடையில் கேரளாவில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏரிகள், அணைகள் நிரம்பி வருகின்றன. பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படும் நீரால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். பலர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இடுக்கி, வயநாடு, நீலாம்பூர், அடையன்பாரா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். சிலர் மாயமாகியுள்ளதால், தேடும் பணி நடைபெற்று வருகிறது.   எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.  எர்னாடு, கன்னூர், தளிபிரம்பா, இரிட்டி, உடும்பன்சோலை, தேவிகுளம் ஆகிய பகுதிகளின் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பல இடங்களில் மழை நீர் காரணமாக  சாலைகள் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடை பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக கேரள அரசு சார்பில், மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.  மீட்பு பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு பணியினர் களமிறங்கி உள்ளனர்.

இந்த நிலையில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மழை வரும் வள்ளிக்கிழமை வரை  நீடிக்கும் என்று கொச்சி  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி