உலகின் மிகக் காரமான மிளகாய் : சுலபமாக சாப்பிடும் வழி இதோ

பெட்ஃபோர்ட் ஷைர்,  இங்கிலாந்து

லகின் மிகக் காரமான மிளகாய் எனச் சொல்லப்படும் கரோலினா ரீப்பர் என்னும் சிவப்பு மிளகாயை சுலபமாக சாப்பிடும் வழியை அதை பயிர் செய்யும் விவசாயி விளக்கி உள்ளார்.

உலகின் மிகக் காரமான சிவப்பு மிளகாய் வகையின் பெயர் கரோலினா ரீப்பர் என்னும் பெயர் கொண்டது.    இந்த மிளகாயை விரும்பி உண்ணுவோர் சிலர் உள்ளனர்.   இதையும் சாப்பிட்டு பார்க்க பலர் முயற்சி செய்கின்றனர்.   அவ்வாறு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் முயற்சி செய்துள்ளார்.    அவருக்கு இதனால் பல வித உடல்நிலை தொந்தரவுகள் உண்டாகி கடுமையான தலைவலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி இங்கிலாந்து முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது.    இங்கிலாந்து நாட்டின் பெட்ஃபோர்ட் ஷைர் பகுதியில் இதை விவசாயம் செய்து வரும் சால்வடோர் ஜெனோவேஸ் என்பவர் இந்த செய்திக்கு பதில் அளித்துள்ளார்.   தாம் பல வருடங்களாக இந்த வகை மிளகாயை பயிர் செய்து விற்பனை செய்து வருவதாகவும்,  இந்த மிளகாயினால் இதுவரை யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் நிகழவில்லை எனக் கூறி உள்ளார்.

இது குறித்து சால்வடோர், “நான் பல வருடங்களாக லட்சக்கணக்கன மிளகாய்களை உற்பத்தி செய்து விற்றுள்ளேன்.   எனக்கு தெரிந்து இதை உண்ட யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதில்லை.    இந்த மிளகாயை நேரடியாக உண்ண முடியாது.   இதை சமையல் செய்து இத்துடன் சேர்க்க வேண்டிய மசாலாவை சேர்த்து கறி சமைத்து உண்ண வேண்டும்.

அதிக காரம் உள்ள மிளகாய் என்பதால் அதற்கேற்ப மற்ற பொருட்களை சேர்க்க வேண்டும்.   மிளகாயை மட்டும் சாப்பிடுவது தவறு.    உணவுக்கு உப்பு போல இந்த மிளகாயை சேர்க்க வேண்டும்.   வெறும் உப்பை மட்டும் உண்ண முடியாது என்பதைப் போல் இந்த மிளகாயையும் தனியாக உண்ண முடியாது.   அதிக அளவிலும் முடியாது.    மிளகாய் உண்ணும் போட்டியில் மட்டுமே அவ்வாறு உண்ண முடியும்”  என நகைச்சுவையுடன் கூறி உள்ளார்.

இது குறித்து விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள், ”இந்த மிளகாய் மிகவும் காரமாக உள்ளதால் அது இரத்தத்தில் கலக்கும் போது இரத்தக் குழாய் சுருங்கத் தொடங்குகிறது.   மேலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.  மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் சிலருக்கு தாங்க முடியாத தலைவலி உண்டாகிறது.” எனக் கூறி உள்ளனர்/

ஆனால் இந்த செய்திகள் இந்த மிளகாய் ரசிகர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.   உலகின் அரிதான வகை கரோலினா ரீப்பர் மிளகாய் தற்போது எங்குமே கிடைப்பதில்லை.     இந்த மிளகாய் விற்கும் விற்பனையாளர், “கரோலினா ரீப்பர் வகை மிளகாய்க்கு இன்னும் நல்ல கிராக்கி உள்ளது.   இந்த மிளகாய் கிடைப்பதே கடினமாக உள்ளது.     இந்த வகை மிளகாய் வந்த உடனேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடுகிறது”  எனத் தெரிவித்துள்ளார்.