மீ டூ: தேசிய மகளிர் ஆணையம் செய்த அதிர்ச்சிகர நடவடிக்கை!

மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன் அவர்களது முகநூல் பதிவு:

மீ டூ’ இயக்கம் பரவிவருவதைத் தொடர்ந்து, பெண்கள் இனி மின்னஞ்சல் மூலம் புகாரை அனுப்பினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மகளிர் ஆணையம் அறிவித்தது. அப்படி அறிவித்தபோதே இது பெண்கள் துணிந்து வெளியே பேசுவதைத் தடுக்கிற உத்தியாகிவிடக்கூடாது என்ற கவலையை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

இப்போது, அந்த அறிவிப்பை நம்பி மின்னஞ்சலில் புகார் அனுப்பிய ஒரு பெண்ணின் கடிதத்தை, அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கே அனுப்பியிருக்கிறது மகளிர் ஆணையம். குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆண் அதே நிறுவனத்தில் சுதந்திரமாகச் சுற்றி வரும் நிலையில் அந்தப் பெண் ஊழியருக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு, மத்திய தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மகளிர் ஆணையம் இந்தப் பிரச்சனையை மோசமாகக் கையாண்டுள்ளது என்றும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தானே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமேயன்றி இப்படி அந்த நிறுவனத்திற்கு அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்றும் தகவல் ஆணையத் தலைவர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறியுள்ளார். (செய்தி: மின்னம்பலம்)

இது திட்டமிட்ட திசை திருப்பலா அல்லது அறிவைச் செலுத்தாமல் எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கையா?

இது போன்ற உத்திகள் மேலும் பல வரலாம். ஆனாலும் பின்வாங்கிவிடாமல், எளிய பெண்களும், சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட பெண்களும் துணிந்து அணி திரளத் தூண்டுவதாக ‘மீ டூ’ இயக்கம் வலுப்பெறட்டும்.