சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்க பணிகளுக்கான  திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
metro with jeya
வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம்  வரை ஒரு வழித்தடமும், சென்டிரல்  முதல் பரங்கிமலை வரை 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு  மற்றொரு வழித்தடத்திற்கும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை பணிகள் முடிக்கப்பட்டு மெட்ரோ ரெயில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
தற்போது திருமங்கலம் முதல் கோயம்பேடு வரை உள்ள பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விரைவில் இந்த சுரங்கப்பாதை  வழித்தடத்திலும் ரெயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வண்ணாரப்பேட்டை வரை உள்ள வழித்தடத்தை விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யக்கோரி வடசென்னை பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.  அதையொட்டி இந்த வழித்தடம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர்  வரை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.  இதற்கு தேவையான  நடவடிக்கை எடுக்கப்பட்டு மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த வழித்தடம்  முழுவதும் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை திட்டமாகும். இதில்  8  ரெயில் நிலையங்களும், பணிமனையும் அமைய இருக்கிறது. இதற்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.3,770 கோடி ஆகும்.
இந்த மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று காலை 11 மணிக்கு  அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்து பேசுகிறார்.  இதற்காக தண்டையார்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாபு ஜெகஷீவன் ராம் விளையாட்டு அரங்கத்தில் விழா ஏற்பாடு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி அளவில் முதல்வர் ஜெயலிலிதா அடிக்கல் நாட்டி மெட்ரோ ரெயில் பணிகளை தொடங்கி வைக்கிறார்.  விழாவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டு பேசுகிறார்.