Random image

கொரோனா நிதியுதவி: சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ரூ. 10.42 லட்சம் அளிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ரூ. 10.42 லட்சம் கொரோனா நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. வரும் 14ம் தேதியுடன் இந்த ஊரடங்கு நிறைவடைகிறது.

அதன்பிறகு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான மாநிலங்களும், மருத்துவத்துறையினரும் ஊரடங்கை நீட்டிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். எனவே  தனிநபர்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ. 10.42 லட்சம்  நிதியுதவி வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மொத்தம் 502 அதிகாரிகள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை கொரோனா நிதிக்காக அளிக்கின்றனர் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.