மெட்ரோ ரெயில்: கோயம்பேட்டிலிருந்து பரங்கிமலை வரை ரூட் கிளியர்!

சென்னை:

கோயம்பேட்டிலிருந்து பரங்கிமலை வரை மெட்ரோ ரெயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதம் 29ந்தேதியன்று, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவையினை தொடங்கி வைத்தார்.

metro

அதையடுத்து 1 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பரங்கி மலை வரையிலான பணிகளும்  தற்போது முடிவடைந்ததால், இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை கடந்த ஆண்டு தொடங்கியது. கோயம்பேடு, புறநகர் பஸ்நிலையம் (சி.எம்.பி.டி), அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய பகுதிகளை இந்த சேவை உள்ளடக்கியது.

2வது கட்டமாக சின்னமலையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதை வழியாக இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அடுத்தகட்டமாக ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் சேவை இன்று காலை தொடங்கியது. இதற்காக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் இன்று திறக்கப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலைக்கு காலை 6 மணிக்கு சேவை தொடங்கியது.
meto
இதற்கு கட்டணம் ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு- ஆலந்தூர் இடையே உள்ள சேவையின் விரிவாக்கமாக பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது.

இந்த புதிய சேவை தொடங்கப்பட்டதையடுத்து கோயம்பேட்டில் இருந்து நேரடியாக பரங்கிமலைக்கு செல்ல முடியும். ஆலந்தூரில் ஏறி இறங்க தேவையில்லை.

மின்சார ரெயில் பயணிகளை மெட்ரோ ரெயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் , கீழ்கட்டளை, வேளச்சேரி பகுதி மக்கள் எளிதாக கோயம்பேடுக்கு செல்ல முடியும். திண்டிவனம், செங்கல்பட்டு, பகுதியில் இருந்து வரும் பயணிகளும் பரங்கிமலை நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரெயில் மூலம் கோயம்பேடு பகுதிக்கு இனி செல்லலாம்.

கோயம்பேட்டில் இருந்து நேரடியாக விமான நிலையம் செல்வதற்கான திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போது ஆலந்தூர் நிலையத்தில் இறங்கி பின்னர் மாறி செல்ல வேண்டும்.

கார்ட்டூன் கேலரி