திருவனந்தபுரம்:

ரயில்வே பட்ஜெட் பறிபோனது தனக்கு வருத்தமளிக்கிறது என்று மெட்ரோ ரயில் மனிதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.


ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டோடு இணைத்தன் மூலம் அந்த துறையின் சிறகுகளுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என டெல்லி மெட்ரோ ரயில்வே கார்பரேஷன் ஆலோசகர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

92 வயதாகும் அவர் கூறுகையில்,‘‘ இது முட்டாள் தனமான முடிவு. நிதிக்காக ரயில்வே நிர்வாகம் நிதியமைச்சகத்தின் கதவை தட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் நலன் கருதியும், ரயில்வேயின் நலன் கருதியும் இந்த முடிவு எடுக்கப்படவில்லை’’ என தெரிவித்துள்ளார்.

‘‘கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறை போல் தற்போது ரயில்வேயும் ஒரு துறையாக ஆகிவிட்டது. ரயில்வே துறை வசம் உள்ள சொத்துக்களை யாரும் மறந்துவிடக் கூடாது.

நிதி ஆதாரத்தை மத்திய அரசு ஒருங்கிணைப்பதற்கு ரயில்வே சொத்துக்களை பிணையமாக பயன்படுத்தும். தனி பட்ஜெட் தகுதியை ரயில்வே இழந்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. எல்லாம் முடிந்துவிட்டது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் முடிவு ஏற்புடையதல்ல.

என்னிடம் ஆலோசனை மேற்கொண்டிருந்தால் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க வேண்டாம் என்று எச்சரித்திருப்பேன்’’ என்று ஸ்ரீதரன் இந்து நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.