திருமழிசை வரை விரிவடையும் சென்னை மெட்ரோ ரயில்

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் சேவை திருமழிசை வரை விரிவடையும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை இரண்டாம் கட்டமாக 118.9 கிமீ தூரத்துக்கு மூன்று பகுதிகளாக உருவாக உள்ளது.  இது மாதவரம் – சோழிங்க நல்லூர், லைட் ஹவுஸ் – பூந்தமல்லி, மற்றும் மாதவரம் – சிப்காட் என மூன்று பகுதிகளாக விரைவில் தொடங்க உள்ளன.  தற்போது இந்த சேவையை பூந்தமல்லியில் இருந்து திருமழிசைக்கு விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பிராஜக்ட் ரிபோர்ட்(திட்ட அறிக்கை)  இன்னும் 6 மாதங்களில் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பணிக்கு ஒப்பந்ததாரராக AECOM நியமனம் செய்யப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையில் போக்குவரத்து விவரங்கள், மார்க்கம் ஆகிய அனைத்தும் இருக்கும்.   எனவே இந்த அறிக்கை விவரங்களை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்குகின்றனர்.

இரண்டாம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் பணிமனைகள் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் திருமழிசையில் ரயில்கள் பராமரிப்பு நடைபெற உள்ளன.  இந்த திட்ட அறிக்கை வந்ததும் அதை அரசுக்கு அளிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெற்ற உடன் பணிகள் தொடங்க உள்ளன.  திருமழிசையில் பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில் இது மக்களுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூந்தமல்லி – திருமழிசை மெட்ரோ ரயில் பாதை நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட தடத்தில் செல்ல உள்ளதால் இங்கு சவிதா எஞ்சினியரிங் கல்லூரி, பனிமலர் எஞ்சினியரிங் கல்லூரி மற்றும் சாஸ்தா பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை உள்ளதால் இந்த கல்லூரி மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.