தீபாவளி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நாளை மறுநாள் முதல் 2 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி மக்கள் நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக  ஏராளமான சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின்  நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து  மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி அதிக அளவிலான பயணிகள் வெளியூர் செல்ல கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு பயணிப்பார்கள். இதனால் வழக்கமாக இரவு 10 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிவரை இயக்கப்படும்.

மேலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் (நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி) கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படும்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பண்டிகை காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பாதைகள் மிகுந்த நெரிசலாக இருக்கும். இந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.