ஒரே ஆண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது

சேலம்:

கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது.

இதனால் அந்த அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 2 அணைகளில் இருந்தும் இன்று காலை தண்ணீர் திறப்பு 97 ஆயிரத்து 858 கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1.80 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. மேட்டூரில் இருந்து நேற்று 1.80 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

ஆனால், நீர்வரத்து தொடர்ந்து 80 ஆயிரம் கன அடியாக இருந்தது. அதனால் மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.