107 அடியை தாண்டியது மேட்டூர் அணை: தண்ணீர் திறந்துவிடுவதை குறைத்தது கர்நாடகா

சேலம்:

மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியை தாண்டிய நிலையில்,  அணை விரைவில் முழு கொள்அளவான 120 அடியை  எட்டும்  என எதிர்பார்க்கப்படுகிறது.  அதே வேளையில் இன்று கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியுள்ள நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள  கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு நேற்று இரவு வரை அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீரின் அளவை குறைத்து உள்ளது.

தற்போது கர்நாடக அணைகளில் இருந்து  62,225 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  கபினி அணையிலிருந்து 32,708 கனஅடி, கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 29,517 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாகவும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் இன்று அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக உள்ளது.

கர்நாடக மாநில அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட வேண்டிய நிலை நிலவுவதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைசூர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு 72,000லிருந்து 62,225 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.