சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், அணைக்குள் இருக்கும்   ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி வெளியே தெரியத் தொடங்கி உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்கு கடந்த மாதம் 12ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அணையின் நீர் மட்டம்   69 அடிக்கு கீழே சரிந்து உள்ளது. இதனால்,  நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலின் நந்தி சிலை நீருக்கு வெளியே தெரிய வந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்கு பேருதவியாக இருந்து வருவது மேட்டூர் அணை.  சுமார் 60 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்த அணை 120 அடி கொள்ளவு கொண்டது. இந்த அணையின் நீர் மூலம் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த  100-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், பல லட்சக்கணக் கான விளை நிலங்களும் பயன்பெற்று வருகிறது.
இந்ம மாபெரும் அணையினள், அணையின்  ஒருபுறமான பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் பிரம்மாண்டமான நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயிலும், 100 அடி உயரக் கோபுரங்கள் கொண்ட கிறிஸ்தவ தேவாலயமும் உள்ளது.
அணையின் நீர் தேக்கம்  78 அடிக்கு மேலே உயர்ந்தால் இந்தக் கோயில்கள் நீரில் மூழ்கிவிடும். நீர்மட்டம் 78 அடிக்கு கீழே சரிந்தால் கோயில்கள் நீருக்கு மேலே தெரியத் தொடங்கும்.
அதன்படி,  கடந்த 14-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கு கீழே சரிந்ததால் கிறிஸ்தவ தேவாலய கோபுரம் நீருக்கு வெளியே தெரிந்தது.

இந்த நிலையில், தற்போது (செவ்வாய்க்கிழமை)  அணையின் நீர்மட்டம் 68.67 அடியாகச் சரிந்துள்ளது. இதனால்,  நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலில் இருந்த மிகப் பெரிய நந்தி சிலையின் தலை நீருக்கு வெளியே தெரியத் தொடங்கி உள்ளது.
இந்த அரிய காட்சியைக் காண  வழக்கமாக ஏராளமானோர்  அங்கு குவிவார்கள். ஆனால், தற்போது, கொரோனா பரவல் தடை  காரணமாக போக்குவரத்து முடங்கி இருப்பதால் இப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.