மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5081 கனஅடியாக உயர்வு…

சேலம்:

ர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5081 கனஅடியாக அதிகரித்துள்ளது.  இதனால், கடந்த சில நாட்களாக  அணையின்நீர் மட்டும் வெகுவாக குறைந்து, அணையினுள் உள்ள ஈஸ்வரன் கோவில்  நந்தி வெளியே  நிலையில் தற்போது தண்ணீர் அதிகரித்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், அணையின் நீர் மட்டம் 68 அடியாக குறைந்துள்ளது. இதனால், அணையினுள் இருந்த ஜலகண்டேசுவரன் கோவிலின் நந்தி நீருக்கு வெளியே தெரிந்தது.

இந்த நிலையில்,  கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இதனால்,  தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரில் ஒரு பகுதியை கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கடந்த சில நாள்களாக ஒகனேக்கல் வழியாக  மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.

நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி,  அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,081 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதே வேளையில், விவசாயத்திற்கு, மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 30.62 டி.எம்.சியாக உள்ளது.

நீர் வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீளும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.