சேலம்:

ர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பருவமழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மழைப்பகுதியிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.

கர்நாடகாவில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் பேய்மழை காரணமாக அங்குள்ள அணை கள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.  கபினி கேஆர்எஸ் அணைகளில் இருந்து வினாடிக்கு  2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் இன்று காலை 2 லட்சம் கன அடி தண்ணீராக அதிகரித்து உள்ளது. இது பிலிகுண்டு லுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கலில் வீடுகளை தொட்டபடி தண்ணீர் செல்வதால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள்  திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஊட்டமலை, இந்திராநகர், நாடார் கொட்டாய் பகுதிகளில் வசித்தவர்கள் மேடான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அஞ்செட்டி சாலையை தொட்டபடி காவிரி வெள்ளம் செல்வதால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்றிரவு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை மேலும் அதிகரித்து 1 லட்சத்து 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. பிற்பகல் 2 லட்சம் கன அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 9-ந்தேதி 54 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 73.60 அடியாக உயர்ந்தது. இன்று பிற்பகல் 85 அடியை எட்டிய நிலையில் இன்று இரவுக்குள் அணையில் நீர் மட்டம்  90 அடியை எட்டும் என நம்பப்படுகிறது.

இதைத்தொடர்ந்துழ, நாள  காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தமிழக முதல்வர் நாளை தண்ணீர் திறந்து விடுகிறார்.

காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.